இவரைப் போன்ற ஒரு மனிதர் இந்த உலகைத் தலைமையேற்று நடத்தினால், இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு விடுவார். நபிகள் நாயகத்தைக் குறித்து மாமேதை பெர்னாட்ஷா கூறிய வார்த்தைகள் இவை. தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாவினால் மட்டும் மொழியாமல் தன் செயல்களால் வாழ்ந்து காட்டி சென்றவர்கள் தாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். தன்னுடன் வாழ்ந்த மக்களைத் தோழர்கள் என்று அன்புடன் அழைத்த முதல் உலகத் தலைவரும் இவர்கள்தாம்.
தன் சபையில் யாரேனும் ஒரு தோழர் வரவில்லையெனில் உடனே அவரைக் குறித்து விசாரிப்பார்கள். ஒருவேளை அவர் நோய்வாய்பட்டிருந்தால் அவர் இல்லம் சென்று விசாரிப்பார்கள். நபிகளாரின் காலத்தில் மதீனத்து பள்ளிவாசல் மஸ்ஜித் நபவியில் ஒரு கறுப்பினப் பெண் தினமும் துப்பரவு பணிகளைச் செய்து வந்தாள். ஒரு நாள் அந்த பெண் பள்ளிவாசலில் இல்லாததைக் கண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் தோழர்களிடம் விசாரித்தார்கள். அப்பெண்மணி இறந்துவிட்டதாக தோழர்கள் அறிவிக்க, ஏன் என்னிடம் அதைத் தெரிவிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டு அவள் அடக்கம் பெற்றிருக்கும் கல்லறைக்குச் சென்று அந்த பெண்ணின் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு சாதாரண கறுப்பின பெண்மணியின் மீது இந்த அளவு அக்கறை கொண்ட ஒரு தலைவரை இனி உலகம் காணுமா என்பது கேள்விக்குறிதான்.
யார் தன்னைக் காண வந்தாலும் அவர்களைப் புன்னகையுடன் வரவேற்பது அவர்களின் வழக்கமாக இருந்தது. சமூகத் தலைவர்கள் யாரேனும் வந்தால், அவர் மாற்று மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவருக்காக எழுந்து நின்று வரவேற்பு அளித்து உபசரிப்பார்கள். விருந்தாளிகளை நல்ல முறையில் உபசரிப்பது இஸ்லாத்தில் ஓர் அங்கம் என்பதைத் தன் தோழர்களுக்கும் வலியுறுத்தினார்கள்.
தன்னைக் கடுமையான சொற்களால் தூற்றியவர்களுக்குக் கண்ணியமான சொற்களில் பதில் அளித்தார்கள். யார் அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் நல்ல விஷயங்களை பேசட்டும் இல்லையெனில் மௌனம் காக்கட்டும் என்பது நபிமொழி. தீய வார்த்தைகளும் கடுமையான சொற்களும் இவ்வுலகில் பெரும் சேதங்களை ஏற்படுத்துகின்றன. லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைக் குடித்த பல போர்களுக்கு வித்தாக இருந்தது இரு நாட்டுத் தலைவர்களின் கடுமையான சொற்கள்தாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இல்லற வாழ்வில் விரிசலை ஏற்படுத்துவதும் அதுதான். எனவே அண்ணல் நபிவழி பேணி நல்லதைப் பேசுவோம் நலமுடன் வாழ்வோம். அல்லாஹுவின் கருணையை என்றென்றும் நாடுவோம்.
– உஸ்தாத் ஹஸன் அவர்களின் சிந்தனை சிறகிலிருந்து

