
நாடு முழுதும், பினாங்கு தென்காசி – கடையநல்லூர் முஸ்லிம் சங்கங்கள் தொடங்கி சிறு சிறு ஜமாத்துக்கள் வரை பல்வேறு பெயர்களில் சிறியதும் பெரியதுமாக பல இயக்கங்கள் உருவெடுத்துவிட்டன. இந்த இயக்கங்களுக்கெல்லாம் ஒரு பாலம் தேவைப்பட்டது. உதிரிகளாகக் கிடக்கும் இந்த முஸ்லிம் அமைப்புகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தால் தான் ஒரு சக்தியை உருவாக்க முடியும் என சிந்தித்தார்கள் படித்த பட்டதாரிகளையும் வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்ட குழுவினர்.
இந்த இயக்கங்களுக்கெல்லாம் ஒரு தாயகம் வேண்டும். அதனை வழி நடத்த ஒரு தந்தை வேண்டும் என எண்ணிய (ஹாஜி இஸ்மாயில் ஷரீஃப், டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால், டத்தோ டாக்டர் ஆரிஃப், டாக்டர் தல்ஹா, வானொலித் தலைவர் ஹாஜி கே.எம் ஹனீஃப், டத்தோ ஷேக் அலாவுதீன், ஷேக் டாவூட், பட்டர்வொர்த் ஜைனுத்தீன், ஜனாப் சேகு முஹம்மது போன்ற) இளைஞர்கள் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லாஹ் அவர்களைத் தலைவராகத் தேர்வு செய்தார்கள். தைப்பிங்கில் நடைபெற்ற அதன் முதல் கூட்டம் பற்றி அன்றைய செயலாளருமான டத்தோ ஸ்ரீ இக்பால் கூறுவதைக் கேட்போம்.
1967ஆம் ஆண்டு தைப்பிங்கில் இருந்த ‘பேரா முஸ்லிம் முன்னேற்ற சங்கத்’ தின் (PMPAT) செயலாளராக இருந்தவர் (இன்றைய டத்தோ ஸ்ரீ) முஹம்மது இக்பால். 1969ஆம் ஆண்டு மே கலவரம் முடிந்த கையோடு பல்வேறு இனங்களுக்கிடையே பல்வேறு மனமாற்றங்களும் சிந்தனைகளும் தலைதூக்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது.
இங்குள்ள இந்தியா முஸ்லிம்களின் நிலைமை என்ன என்ற கேள்வியும் விவாதங்களும் எல்லா முஸ்லிம் இயக்கங்களிலும் எழுப்பிய நிலையில் ஏற்கனவே 1962ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இஸ்லாமிய மாணவ இயக்கங்களின் தொடக்கத்திற்கும் வித்திட்ட இளைஞர் என்ற முறையில் இங்கே ஏதாவது செய்ய வேண்டும் என்ற தமது உள்ளக்கிடக்கையை அச்சங்கத்தின் செயலவையின் முன் வைத்தார்.
1969ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள் தைப்பிங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் ஒரு (PMPAT ஏற்பாட்டில்) மாநாடு நடந்தது. முஹம்மது இக்பாலே தலைமை ஏற்று நடத்திய அந்த மாநாட்டில் தான் நமது சமுதாயத்துக்காக ஒரு பாலம் அல்லது பேரவை தேவை என்ற முடிவெடுக்கப்பட்டு தலைநகரில் இருப்பதால் அதனைப் பதிவு செய்வது போன்ற அனைத்துப் பொறுப்புகளையும் சிலாங்கூர் இந்திய முஸ்லிம் சங்கமான SIMAவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தலைவர் உபைதுல்லா தைப்பிங் சந்திப்புக்கு வர இயலவில்லை.
இதனால் 1971 இல் சிலாங்கூர் இந்திய முஸ்லிம் சங்கம் அமைப்புக் குழுவொன்றை முறையாகத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டத்தைக் கூட்டியது. அதில் டான் ஸ்ரீயை ஏகமனதாக தலைவராகத் தேர்வு செய்த கூட்டம் டத்தோ ஸ்ரீ இக்பாலை செயலாளராக நியமித்தது. அப்போது தான் தைப்பிங்கிலிருந்து (மலாயா பல்கலைக்கழக) மேல்படிப்புக்காகத் தலைநகர் வந்த இக்பால்
‘1970 முதல் 1973 வரைக்குமான மூன்றாண்டுகள் எனது வாழ்க்கையிலேயே சவால்மிக்க காலக்கட்டம்’ என்கிறார். உயர்படிப்பையும் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கிடையில் பொதுவாழ்க்கை ஒரு பக்கம், ‘நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். இக்பால் செயலாளராக வராவிட்டால் நான் தலைவர் பொறுப்பை ஏற்க முடியாது’ என்று சொல்லிவிட்டார் டான் ஸ்ரீ” என நினைவு கூர்கிறார் அவர்.
1973ல் பெர்மிம் பேரவையை முன்னின்றுத் தொடக்கிய டான் ஸ்ரீ அவர்களால் அரசியல், வணிகம் போன்ற இன்ன பிற ஈடுபாடுகள் காரணமாக தொடர்ந்து தலைமை தாங்க விரும்பவில்லை.அதனால் இளம் ரத்தங்களின் ஆசைக்கு வழிவிட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு ஒதுங்கினார். ஆனாலும் பெர்மிமின் எல்லாப் பணிகளுக்கும் தன்னால் முடிந்தவரை பொருளுதவியும் ஆலோசனைகளும் தந்து கொண்டு தான் இருந்தார். அதனால் தான் பெர்மிமின் இன்றைய காலகட்டத்தில் அமைந்துள்ள மண்டபத்துக்கு டான் ஸ்ரீ உபைதுல்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றும் கூட அவர் மறைவுக்குப் பிறகும் அவர் சார்பில் அவருடைய உபைதி அறநிறுவனம் உதவிக் கொண்டு தான் இருக்கிறது. அவை அவர் விட்டுச் சென்றுள்ள கடமைகள்.
அவர் காலத்திலும் அவருக்கு பின்னரும் போடப்பட்ட பெர்மிம் கூட்டுறவு, ‘நம் குரல்’ மாதிகை போன்ற பல திட்டங்கள் தொடராமல் போயின என்பதும் பெர்மிம் கட்டடத் திட்டம் இழுபறியாகவே இருந்ததும் டான் ஸ்ரீயின் ஏமாற்றங்களில் சில. எழுந்து வந்து பேச முடிந்தால் இவற்றை தான் பேசுவார். என்றாலும் பெர்மிம் இன்றும் தன்னாலியன்ற சில திட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது என்பது உண்மை. அவற்றில் முக்கியமானவை கல்வி நிதியாகும். அண்மையில் சில நல்ல உள்ளங்களின் நன்கொடைகளை பயன்படுத்தி சமுதாய பிள்ளைகளின் உயர்படிப்புக்காக உதவி வருகிறது. டான் ஸ்ரீயை தொடர்ந்து பெர்மிம் பேரவையின் இரண்டாவது தலைவராகப் பொறுப்பேற்ற டத்தோ ஹாஜி முகம்மது இஸ்மாயில் ஷரீஃப் அவர்கள், டான் ஸ்ரீயுடனான உறவையும் நட்பையும் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.
ஹாஜி முஹம்மது இஸ்மாயில் ஷெரிஃப்
1969 ஆம் ஆண்டு என்னுடைய பட்டப் படிப்பை சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்டு கோலாலம்பூர் வந்து சேர்ந்தேன். Braddel & Ramani நிறுவனத்தில் சேர்ந்து சேம்பரிங் செய்து கொண்டிருந்தேன். 1973 இல் பெர்மிம் அமைப்புப் பதிவு முடிந்து முதல் கூட்டம் தொடங்கவிருந்த நேரம். டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் என்னை அணுகி, மலேசிய இந்திய முஸ்லிம்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது தொடர்பான ஒரு கட்டுரை தயாரித்து படைக்குமாறு கேட்டுக் கொண்டார். 1973 மார்ச் மாதம் அந்த முதல் கூட்டம் கோலாலம்பூர் ஜாலான் ராஜா, பழைய நகர மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது தான் முதல் முறையாக டான் ஸ்ரீ உபைதுல்லாவைக் கண்டேன். டான் ஸ்ரீ தலைவராகவும் முஹம்மது இக்பால் கௌரவச் செயலாளராகவும் அல்மர்ஹும் கே. முஹம்மது ஹனீஃப் துணைச் செயலாளராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். மற்ற பலரோடு நானும் செயலவை உறுப்பினராகத் தேர்வு பெற்றேன்.
முதல் செயலவை கூட்டம் 1973 ஏப்ரலில் நடைபெற்றது. அதற்கு முன்பே 1969 இல் மற்ற நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அமைத்திருந்த “முஸ்லிம் கல்வி நிதி” (MEF – Muslim Education Fund) (இன்றைய இஸ்லாமிய கல்வி வாரியம்) பற்றி விளக்கினேன். அந்த அமைப்பையே பெர்மிம் குடையின் கீழ் இணைக்கலாம் என்று பரிந்துரைத்தேன். அது சிறந்த கருத்து தான் எனக் கூறிய தலைவர் இது பற்றி அடுத்த கூட்டத்தில் பேசுவோம் என்றார். இதனிடையே, மேல் படிப்புக்காக நான் லண்டன் போய்விட நேர்ந்தது. LLM படிப்பை முடித்துக் கொண்டு 1974 அக்டோபரில் திரும்பி வந்து பார்த்தபோது அதுவரை எந்த நடவடிக்கையும் நிகழவில்லை என அறிந்தேன்.
இதனிடையே பெரும்பாலும் பட்டதாரிகளைக் கொண்ட ஓர் இளைஞர் குழு சமுதாய வளர்ச்சியின் பால் அக்கறையோடு (ராத்திப் குழு) அடிக்கடிக் கூடிக் கலந்துரையாடல் நடத்திக் கொண்டிருந்தது. பெர்மிமின் இயக்கப் பணிகள் இல்லாமை குறித்து வருத்தமும் அடைந்தது அக்குழு. அந்த சமயத்தில் தான் 1976 மார்ச் மாதம் ஈப்போவில் பேராளர் மாநாடு ஒன்றை நடத்தியது பெர்மிம். அந்தக் குறைபாடுகளை கடிதமாகவே அந்த மாநாட்டில் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணிய அக்குழு அதனை எழுதிப் படைக்கும் பொறுப்பை என்னிடமே அளித்துவிட்டது.
டான் ஸ்ரீ உபைதுல்லா தான் கூட்டத்தை தலைமை ஏற்று வழி நடத்தினார். அந்த சமயத்தில் டான் ஸ்ரீ அவர்கள் மேலவையின் (செனட் சபை) துணைத் தலைவராகவும், ம. இ. கா வின் உதவித் தலைவராகவும் மலேசிய முதலாளிகள் சங்கத் தலைவராகவும், சிலாங்கூர் இந்திய முஸ்லிம் சங்கத் தலைவராகவும் கோலாலம்பூர் இந்திய முஸ்லிம் பள்ளித் (மஸ்ஜித் இந்தியா) தலைவராகவும் இன்னும் ஏராளமான பொதுநல இயக்கங்களின் ஆலோசகர், புரவலர், பொறுப்பாளராகவும் விளங்கினார். முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமின்றி பொதுவாக மலேசிய இந்தியத் தலைவராகவே புகழ் பெற்றுத் திகழ்ந்தார். அவர்பால், எனக்கும் மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது.
அத்தகைய நேரத்தில் தான் எங்கள் கடிதம் தாங்கிய தீர்மானம் பேராளர் கூட்டப் பரிசீலனைக்கு வருகிறது. முதல் கேள்வியே “பெர்மிமின் பலவீனமான நடவடிக்கை’ பற்றியது தான். கூட்டத்தில் ஒரு வித சலசலப்பும் சங்கடமும் எழுகிறது. எல்லாப் பேராளர்களின் முகத்திலும் மனதிலும் தோன்றிய சிந்தனை இது தான். ‘ஒரு புத்தம் புதிய இளைய வழக்கறிஞர் எப்படியாப்பட்ட டான் ஸ்ரீயை நோக்கிக் கேள்வி எழுப்புகிறானே.’
ஒரு வகையாக கூட்டம் தொடர்ந்து நடைபெற்று தேர்தல் அங்கம் வருகிறது. முதலில் தலைவர் பதவிக்கு நியமனம் கோரப்பட்டவுடன் உடனடியாக டான் ஸ்ரீயின் பெயர் முன்மொழியப்பட்ட, பல வழிமொழிகள் தொடர்கின்றன. மற்ற யார் பெயரும் உச்சரிக்கப்படவில்லை. டான் ஸ்ரீ அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஒரு சில நிமிடங்கள் அமைதியும் மௌனமுமாக கூட்டம் நிலைக்குத்தி இருக்கிறது. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையும் புரியவில்லை. மௌனத்தைக் கலைத்தவாறு டான் ஸ்ரீயே எழுந்து தனது நிலைப்பாட்டை உறுதியோடு மிகவும் உறுதியோடு தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று உரைக்கிறார்.
மேலும் சில நிமிடங்கள் நீடிக்க, திடீரென்று யாரோ ஒருவர் எழுந்து நின்று கொண்டு, என்னுடைய பெயரை முன்மொழிந்து விட, இன்னொருவர் வழிமொழிகிறார். அதிரிச்சியிலும் குழப்பத்திலும் உறைந்து போய் அமர்ந்திருக்கிறேன் நான். வேறு எந்த நியமனமும் வராத நிலையில் நியமனம் முடிந்து விட்டது என்று அறிவிக்கப்பட அடியேன் தலைவராகிவிட்டேன். கைகால் உதறிய நிலையில் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தேன். இது நானோ அந்த குழுவோ எதிர்பார்த்த ஒன்றல்ல. பிறகு கூட்டம் தொடர்ந்தது, நான் ஒன்றுமே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். பிறகு யோசித்துப் பார்த்தேன். டான் ஸ்ரீ மனம் காயப்பட்டுவிட்டதோ அவரைப் புண்படுத்தி விட்டேனோ என்றெல்லாம் மனதுக்குள் புலம்பினேன். இருக்காது என்று ஆறுதல் படுத்திக் கொண்டேன். அப்படி இருந்தால் வேறு யாராவது ஒரு பெயரை அவரே முன்மொழிந்திருக்கலாம். அப்படி அவர் செய்திருந்தால் அவர்தான் தலைவராகி இருப்பார். அதனைத் தொடர்ந்து மற்ற பதவிக்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தன.
கூட்டம் முடிந்து மேடையிலிருந்து இறங்கி அனைவரும் கலையும் போது பலரும் டான் ஸ்ரீயை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். என் அருகில் வந்த டான் ஸ்ரீ, தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு சொன்னார். ” எனக்கு எந்த வருத்தமும் இல்லை, சரியான கைகளில் தான் பெர்மிமை ஒப்படைத்திருக்கிறேன், நிம்மதியாக இருக்கிறது.” ஆனால், எனக்கு தான் ‘என்னுடைய சிறிய கால்களுக்கு பொருத்தமில்லாத பெரிய காலணியை அணிந்து விட்டேனோ’ என்ற அச்சம் தலை தூக்கியது.
ஹாஜி தாஜுதீன்
முதல் முதலாக நம் நாட்டில் தோக்கோ மால் ஹிஜ்ரா விருது ஓர் இந்திய முஸ்லிம் தலைவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது மர்ஹூம் டான் ஸ்ரீ டத்தோ ஹாஜி எஸ். ஓ. கே. உபைதுல்லா அவர்களுக்கு தான். அன்னாருக்கு மட்டுமல்ல, இது நமது நாட்டு ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
1973ஆம் ஆண்டில் டான் ஸ்ரீ அவர்கள் சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி பலப்படுத்துவதுடன் அதன் வளர்ச்சிக்கும் பாடுபடலாம் என்று எண்ணினார். ஒரு சில சமுதாயத் தலைவர்களுடன் இணைந்து மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தோற்றுவித்ததுடன் அதன் முதல் தலைவராகவும் சுமார் 4 ஆண்டுகள் செயல்பட்டார். அன்றைய வித்து இன்று விருட்சமாகி அவரது எண்ணங்களை செயலாக்கி வருவதுடன் அரசாங்கத்திடம் தன்னை ஒரு பலமான இயக்கமாக முன்னிறுத்தியுள்ளது.
டான் ஸ்ரீ அவர்களை இன்றைய சமுதாயத்தினரும் வருங்கால சமுதாயத்தினரும் என்றென்றும் நினைவுகூரும் வகையில்தான் அமைந்துள்ளது. ‘டான் ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லா மண்டபம்’. இங்கு சமுதாயக் கூட்டங்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
