இறையன்பு – இறை நம்பிக்கை – இறைத் தியாகம்

உலகத்தின் எல்லா பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் எனும் புனித பயணத்தை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்வதை நாம் காணுகின்றோம். பொருளாதார பலமும் உடல் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது ஹஜ் கடமை என்று இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்பதை நாம் விளங்கவேண்டுமெனில், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இறை நம்பிக்கை என்ற ஒரு கோட்பாட்டை நாவினால் மட்டும் நவின்று விட்டு செல்லாமல் தன் வாழ்நாள் முழுவதையும் அதன் அடிப்படையில் அமைத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஓர் ஒப்பற்ற இறைத்தூதர். தான் மட்டும் அல்லாமல் தன் குடும்பத்தையும் அதன் அடிப்படையில் அமைத்தார்கள்.

ஓர் அடிமைக்கும் அல்லாஹுவிற்கும் மத்தியில் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு செயல்களின் மூலமும் நிருபித்து காட்டிய ஒரு ஞானி என்று தான் அவர்களை விவரிக்க முடியும். திருமணம் ஆகி நீண்ட காலம் குழந்தை இல்லை. இதன் காரணமாக அவர்கள் அல்லாஹுவின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. அவன் மீது அதிருப்தியும் அடையவில்லை. மாறாக, இது தான் அல்லாஹுவின் விருப்பமெனில் அதை கொண்டு நான் பொருந்தி கொள்கின்றேன் என்று பொறுமையுடன் வாழ்ந்தார்கள். இன்றைய உலகில் வாழும் நமக்கு இதில் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு விஷயத்தை நாம் அல்லாஹுவிடம் கேட்கலாம். அது நம்முடைய உரிமை அதை அல்லாஹுவும் விருப்பப்படுகின்றான். ஆனால் அதைக் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அல்லது அதைத் தாமதித்து கொடுப்பதும் அவனுடைய அதிகாரம். இந்த விஷயத்தில் அடியார்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. பொறுமை இல்லாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். நாம் விரும்பும் விஷயம் நடக்கவில்லை என்றால் வருத்தப்படுவது மனித இயல்பு. ஆனால் அதையே நினைத்து நம்மை நாம் வருத்திக்கொள்வது இறை நம்பிக்கைக்கு மாற்றமான ஒரு காரியமாகும்.

இறை நம்பிக்கை என்பது அல்லாஹு இருக்கின்றான் என்று நம்புவது மாத்திரம் அல்ல. அல்லாஹு தான் என் வாழ்க்கைக்கு முழு பொறுப்பேற்று இருக்கின்றான், அவன் நாடாமல் என் வாழ்வில் எதுவும் நடப்பதில்லை என்று நம் வாழ்க்கையை அவனுடன் தொடர்பு படுத்தி வாழ்வது தான் இறை நம்பிக்கையாளரின் வாழ்வாகும். அல்லாஹுவின் ஏற்பாடுகளை நாம் பொருந்தி கொள்கின்ற பொழுதுதான் அல்லாஹு நம்மைக் கொண்டு பொருந்தி கொள்கின்றான். இவ்வுண்மையை அறிந்து செயல்பட்டவர்கள் இறைநேசர்களானார்கள் என்பது உண்மை வரலாறு.

நீண்ட காலம் கழித்து அல்லாஹு கொடுத்த குழந்தையை அறுத்து பலியிட வேண்டும் என்று அல்லாஹ் ஆணையிட்டபொழுது சற்றும் தயங்காமல் தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்றால் இது இறைதியாகத்தின் வெளிப்பாடு.என் உடல் உட்பட உலகில் உள்ள அத்தனை பொருட்களும் எனக்குச் சொந்தமில்லை என்ற உணர்வின் அடிப்படையில் வாழும் மனிதர்களால் மாத்திரம் தான் இப்படிப்படட தியாகங்களைச் செய்ய முன்வர முடியும். இந்த உணர்வைத் தன் வாழ்வின் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்கள் தான் நபி இப்ராஹீம் ( அலை ). நானும் என் குழந்தையும் அல்லாஹுவிற்கு தான் சொந்தம் என்ற உண்மையின் அடிப்படையில் வாழ்ந்ததால் தான் அவர்களின் பெயரும் வாழ்வும் இன்றளவும் நினைவு கூறப்படுகின்றது.

இறையன்பு, இறை நம்பிக்கை, இறைத் தியாகம் என்ற இந்த மூன்று அம்சங்கள் தாம் நபி இப்ராஹீம் ( அலை ) அவர்கள் கற்றுத் தந்த வாழ்வியல் ஆன்மிக பாடங்களாகும். அதன் அடிப்படையில் வாழ்ந்து இறை பொருத்தத்தைப் பெறகூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக ! ஆமீன்

– உஸ்தாத் ஹஸனின் “சிந்தனை சிறகுகளிருந்து” ஒரு சிறகு 

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*